தமிழ்நாடு

கட்டுப்பாடுப் பகுதிகளே இல்லை... கொரோனா இல்லாத நகரமாக நீடிக்கும் சென்னை...

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  எந்த பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லை என மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருக்கும்பட்சத்தில் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து 1633 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லாததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக தொடர்ந்து சென்னை நீடித்து வருகிறது.
தற்போதைய  நிலவரப்படி, 2 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளதாகவும் அந்த இடத்திலும்  5க்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிப்புகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தொற்று அதிகரிக்காமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஊரடங்கு தளர்வுகளில் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.