தமிழ்நாடு

தீட்சிதர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!

Tamil Selvi Selvakumar

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இதற்கு மேலும் அரசு தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை, காவல் துறையினரின் பாதுகாப்புடன் சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் பதாகையை நீக்கி, பொதுமக்களுக்கு கனகசபை மீது ஏறும் அனுமதியை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களை வைத்து புதிய புதிய பிரச்னைகளை உருவாக்குவதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளதாக குற்றம் சாட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,  சிதம்பரம் நடராஜர் கோயில்  வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில் இந்து அறநிலையத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்கள் மற்றும் நீதிமன்றத்தை அவதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஆட்சியின் அவலங்களை மறைக்க கோயில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.