தமிழ்நாடு

மன்னிப்பு கேட்ட முதல்வர்; "CM வரும்போது எழுந்து நிற்க வேண்டும்.." - அமைச்சர் ரமேஷ் பேச்சால் சட்டமன்றத்தில் சலசலப்பு!

"பெயரை குறிப்பிட்டு பேசினது தவறுதான். அவர் சார்பாக நான் ‘SORRY’ கேட்டுக்கொள்கிறேன்..."

Muthu Lakshmi

நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. இதற்கிடையே, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய கருத்து மற்றும் அவை மரபுகள் தொடர்பாக எழுந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக செய்த சாதனைகள் குறித்து முன்னாள் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேசினார். அதற்கு இடையே எழுந்து பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், “திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி திமுக உறுப்பினர் அடுக்கடுக்காக கூறி வந்தார். 2026ல் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் எங்கள் முதல்வர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் பேச்சின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை “கருணாநிதி” என்று பெயரை மட்டும் குறிப்பிட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் முதல்வர் குறித்து கூறப்பட்ட அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

அதன் பிறகு தனது உரையை தொடங்கிய முதலமைச்சர் விஜய், “உங்க தலைவரோட பெயரை குறிப்பிட்டு பேசினது தவறுதான். அவர் சார்பாக நான் ‘SORRY’ கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, அவை மரபுகள் தொடர்பாக உறுப்பினர் பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். “சட்டப்பேரவைத் தலைவர் உள்ளே வரும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பதுதான் மரபு. முந்தைய காலங்களில் முதலமைச்சர்கள் உள்ளே வந்ததும் இருக்கையில் அமர்வார்கள். இப்போது முதலமைச்சர் அங்கும் இங்கும் சென்று, திரும்பி வணக்கம் செலுத்திவிட்டு இருக்கைக்கு வருகிறார். இதனை புதிய மரபாக கருத வேண்டுமா? அப்படி எடுத்துக்கொண்டால், அவைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் வரும் போதும் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமா? ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்களா? என்பதை அவைத்தலைவர் விளக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு கண்ணியத்தை கற்று கொடுங்கள் என்றும் “முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். 8 கோடி தமிழக மக்களின் முதலமைச்சர் வரும்போது மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை. எழுந்து நிற்கவில்லை என்பது குற்றம், குறையல்ல. அது அவரவர் நடைமுறை. சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை” என்று பதிலளித்தார்.

இதையடுத்து அவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், “பேரவைத்தலைவர் வரும் போது கட்சி வித்தியாசமின்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது மரபு. முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை. எழுந்து நிற்பது நம் பாரம்பரியம். அந்த கண்ணியத்தை பாதுகாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

இதனால், முன்னாள் முதலமைச்சர் குறித்து அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விவகாரமும், அவை மரபுகள் தொடர்பாக எழுந்த விவாதமும் இன்று சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்