தமிழ்நாடு

இந்தி திணிப்புக்கு எதிராக உயிர் தியாகம்...இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

மேட்டூர் அருகே இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 85 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தி திணிப்புக்கு எதிராக தற்கொலை:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். 85 வயதான இவர், நங்கவள்ளி திமுக  முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்களும் உள்ளன. திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளதால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல், தாழையூர்  திமுக கட்சி அலுவலகம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதே இடத்தில் உயிழந்தார்.

கடிதம் எழுதிய தங்கவேல்:

மேலும் தீக்குளிப்பதற்கு முன்பாக, ஒரு வெள்ளைத்தாளில் "மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க இந்தி  கோமாளி எதுக்கு, இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கையை பாதிக்கும் " என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்:

இந்நிலையில் அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம் 
எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தித் திணிப்பை எதிர்த்து ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம் என்றும், போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் உருக்கத்துடன்கேட்டுக் கொண்டுள்ளார்.