தமிழ்நாடு

அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

Tamil Selvi Selvakumar

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு தளங்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டு தங்க காதணி, சுடுமண் முத்திரை, திமில் உள்ள காளையின் 70சென்டி மீட்டர் நீளமுள்ள முதுகெலும்பு, உறைகிணறு உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசின் தொல்லியல் துறை, அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்றது.

ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, கீழடியில் இரண்டு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் நவீன விளக்குகள், ஒலி - ஒளி காட்சிகள், மினி தியேட்டர், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பின்னர் பார்வையிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.