வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பத்மாவதி நகர், ஒன்றிய மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாம், ஆவடி நகராட்சிகுட்பட்ட ஸ்ரீராம் நகர், கணபதி நகர், திருமுல்லைவாயல், பூந்தமல்லி நகராட்சிகுடப்பட்ட அம்மன் கோயில் தெரு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும் தேங்கியுள்ள வெள்ளநீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆவடியில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென்று சாலையோர கடை ஒன்றில் அமர்ந்து தேனீர் அருந்தினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.