தமிழ்நாடு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்தில் உள்ள புது ஏரியில் கடந்த 22 ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பிரசாந்த், பாலாஜி என்ற இரண்டு மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி தினேஷ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் ஏரியில் குளிக்கச்சென்று எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.