தமிழ்நாடு

கோவை கார் விபத்து தொடர்பாக முதலமைச்சர் பரிந்துரைத்தது என்ன?

Tamil Selvi Selvakumar

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலானாய்வு அமைப்புக்கு  மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். 

கோவை கார் வெடித்த சம்பவம்:

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் காரில் பயணித்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஆலோசனை:

இந்நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன்  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

என்.ஐ.ஏக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை:

இதனை தொடர்ந்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலானாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்துள்ளார். கோவையில் பாதுகாப்பை மேலும் தொடர்ந்து உறுதிப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 இடங்களில் புதிய காவல்நிலையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். 

உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்:

மேலும், வரும் காலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையில் சிறப்பு படை அமைக்கவும், மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.