தமிழ்நாடு

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை!

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குரு பூஜை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சாலை மார்க்கமாக பசும்பொன் சென்றார். அங்கு அவருக்கு திமுகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நினைவகத்திற்குச் சென்ற முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரை பேரறிஞர் அண்ணா, தேவர் திருமகனார் என்று பெருமைப்பட அழைத்ததை நினைவுகூர்ந்தார். மேலும், முத்துராமலிங்க தேவர் வீரராகவே பிறந்தார், வீரராகவே வாழ்ந்தார், வீரராகவே மறைந்தார் என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மாளிகைக்குள் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும் மாளிகையின் முன் தான் குண்டு வீசப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக நிர்வாகியைப்போல் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். இன்னாருக்கு இதுமட்டுமே என்பது ஆரியம், எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிடம் என்றும் பேசினார். 

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.