தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டை முதல்வர் வழங்கினார்

2021ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை, விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

Malaimurasu Seithigal TV

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் சேதத்தால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். அவர்களின் நலன் கருதி 2021 ஆண்டு, சம்பா சாகுபடி பருவத்தில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இதெற்கென ஆயிரத்து 597 கோடியே 18  லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. 

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில், 10 விவசாய பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பயிர் காப்பீட்டு நிவாணரத்திற்கான ஆணைகளை வழங்கினார்.  

அதைத்தொடர்ந்து, மீன்வள தொழில்நுட்ப கல்வி நிலைய கட்டிடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் சுமார் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டிடமும் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. மீன் வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டிடங்களையயும் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முன்னதாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், கால்நடை பராமரிப்பு துறையின் 2020 - 21 ஆம் ஆண்டின் பெரு நிறுவனங்களின் பங்கு ஈவு தொகையான 1 கோடி ரூபாயையும், 
சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாநில பேரிடர் ஆணையத்துக்கு வழங்க வேண்டிய சுமார் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வரிடம் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.