தமிழ்நாடு

வாக்குச்சாவடியில் சாமானிய மக்களுள் ஒருவராக வாக்களித்த முதல்வர் ஸ்டாலின்!!

Tamil Selvi Selvakumar

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சாமானிய மக்களுள் ஒருவராக வாக்கினை செலுத்தினார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது 11 ஆண்டுகளுக்கு பின் இன்று நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தேர்தல் ஆணையம் செய்துள்ள நிலையில், பொதுமக்கள் காலை முதல் விறு விறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே தனது வாகனத்தையும், பாதுகாப்பு வாகனங்களையும் நிறுத்திக்கொண்ட அவர், நடந்து சென்று வாக்குச்சாவடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் காத்திருந்தார். தொடர்ந்து தனது வாக்கினை பதிவு செய்து, ஜனநாயக கடமை ஆற்றினார். அவரை தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார். 

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்பு என்பது சிறிய குடியரசு என குறிப்பிட்டார். அதிமுக போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு தோல்வி பயத்தில் அவர்கள் போராட்டம்  நடத்துவதாக கூறினார். அதோடு வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.