தமிழ்நாடு

பொருளாதாரத்தை உயர்த்துவதே அரசின் லட்சியம் - முதலமைச்சர் உரை!

Tamil Selvi Selvakumar

பொருளாதாரத்தை உயர்த்துவதே தமிழக அரசின் லட்சியம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தைவான் நிறுவனத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்: 

செங்கல்பட்டில் தைவானின் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தயாரிப்புத் தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பெகாட்ரான் நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி ஏராளமானவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக குறிப்பிட்டார். உலகப் புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிப்பதாகவும் கூறினார். 

முதலமைச்சர் பெருமிதம்:

தொடர்ந்து பேசிய அவர், சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.