தமிழ்நாடு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Malaimurasu Seithigal TV

வடகிழக்கு பருவமழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில், அதனை முழுமையாக அகற்றுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கிடையில் நவம்பர் 25- ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடம் முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்க்கொண்டார். 

அதில் கன மழையின் போது கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை ஆகியவற்றை  கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

மேலும், தமிழக அரசின் சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க, மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மழை பொழிவு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கான நிவாரண முகாம் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.