பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம் என மகளிர் தினத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கூறியுள்ளார்.
இதையும் படிக்க : வலுவான கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக...பொய் செய்தியை பரப்பி வருகிறது - உதயநிதி!
அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், "அச்சமும் நாணமும் அறியாத பெண்கள், அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களாக அல்லாமல், எண்ணற்ற திட்டங்கள் மூலம் அதனை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகளிர் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது குறித்து, மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்த முதலமைச்சர், ”பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே!" என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்! இவ்வாறு தனது டிவிட்டர் பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.