தமிழ்நாடு

”இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும்” - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் - கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tamil Selvi Selvakumar

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

கடந்த 15ம் தேதி வரை தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழ் மொழியை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இறுதியாக, நீட் தேர்வு விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.