தமிழ்நாடு

சினிமா பாணியில் கடத்ததல் நாடகம்... செல்போன் நம்பரை வைத்து அதிரடி கைது...

சூதுகவ்வும் பட பாணியில்  கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம்

Malaimurasu Seithigal TV
சென்னை அம்பத்தூர் அருகே சூதுகவ்வும் படம் பாணியில் ஒருவரை கடத்தி 10லட்சம் பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகத்திடம் நேற்று காலை அவரது தாய் சாந்தி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சண்முகத்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தாய் சாந்திக்கு மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, சண்முகத்தை கடத்தி விட்டதாகவும், 10 லட்சம்   ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். பின் சிறிது நேரத்தில் சண்முகத்தின் தந்தை ராமசாமிக்கு சில புகைப்படங்கள் வந்துள்ளன.
உடனடியாக  சண்முகத்தின் உறவினரான ராஜேஸ்வரனிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சண்முகத்தின் செல்போன் எண்ணை வைத்து, அவரை மீட்டனர். மேலும், விசாரணையில் சண்முகமும் அவரது நண்பரான ரவியும் இணைந்து இந்த கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
மேலும், உறவினர் ராஜேஸ்வரனிடம் இருக்கும் பணத்தை பறிக்கவே இந்த நாடகம் என்பது வெளிச்சத் திற்கு வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சண்முகம், ரவி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.