தமிழ்நாடு

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு? இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்...

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து, பல மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதில் 60 சதவீதம் பேர் தேர்வு நடத்த ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் +2 தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை தவிர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் +2 தேர்வு வேண்டாம் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை கேட்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்க உள்ளார். அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவர் எடுத்துரைக்க உள்ளார். 

அதன் பிறகு பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார். இன்றைய தினமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு வரும் செப்டம்பரில் பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.