-
தமிழ்நாடு

"மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு".. இல்லத்தரசிகளுக்கு இன்று காலை.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அதிரடியாக வெளியிட்டுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய்க்கு பதிலாக, இந்த மாதம் ஒவ்வொரு பயனாளியின் வங்கி கணக்கிலும் நேரடியாக 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் அறிவிப்புக்கான காரணத்தை விளக்கிய முதலமைச்சர், வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்க விடாமல் தடுக்கச் சில அரசியல் சக்திகள் சூழ்ச்சி செய்வதாகக் குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், அவர்களுக்கு அடிமையாகத் தமிழ்நாட்டில் இருக்கும் மற்றொரு கூட்டமும் இணைந்து, இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சிப்பதாகத் தகவல்கள் வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் ஏழை எளிய பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தனது வீடியோ பதிவில் உருக்கத்துடன் தெரிவித்தார். கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கடும் வெயிலுக்கு இடையே பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சிரமங்களையும், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் குடும்பத்தின் மருத்துவச் செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத் தடைகள் அல்லது சட்டச் சிக்கல்கள் காரணமாக அடுத்த சில மாதங்களுக்குத் தொகை வழங்கப்படுவதில் ஏதேனும் முட்டுக்கட்டை ஏற்பட்டால், குடும்பத் தலைவிகள் படும் கஷ்டத்தை ஒரு மகனாக, ஒரு சகோதரனாகத் தான் உணர்வதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதனால்தான், பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகையுடன் சேர்த்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கான தொகையையும் முன்கூட்டியே வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் 3000 ரூபாயும், கூடுதல் கோடைக்காலச் சிறப்புத் தொகையாக 2000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாய் தற்போது ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை ஒரு கோடியே 31 லட்சம் பெண்களும் கவனமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும், முடிந்தவரைச் சேமிக்கப் பழக வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கான செலவை ஈடுகட்டும் வகையில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதால், இதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இறுதியாக, அடுத்ததாக அமையப் போகும் திராவிட மாடல் ஆட்சியிலும் பெண்களின் நலனே பிரதானமாக இருக்கும் என்று உறுதி அளித்த முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதியாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த முறை திமுக ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகையை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். "சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" என்ற கலைஞரின் பாணியில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கிறார் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கடந்த காலப் பொருளாதார வளர்ச்சியை விடச் சிறந்த வளர்ச்சியை எட்டி, எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்துத் தமிழ்நாடு வெற்றி பெறும் என்று கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

Anbarasan