தமிழ்நாடு

77வது சுதந்திர தின விழா "கலைஞர் நூற்றாண்டு பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்" முதலமைச்சர் பேச்சு!

Malaimurasu Seithigal TV

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்று, கோட்டையில் தேசிய கோடியை ஏற்றிவைத்து, மக்களிடம் உரியற்றியுள்ளார்

அப்பொழுது பேசிய அவர் "400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா என்பது எல்லைகளால் அல்ல எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு அரசை தான் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம்" என பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

மேலும், "புதுமைப்பெண் திட்டத்திற்காக நடப்பாண்டில் சுமார் 2,11,000 உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து திட்ட மூலம் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசு பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

மேலும், "ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு என ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். ஓலா உபர் ஸ்விக்கி சொமோட்டோ போன்ற நிறுவனங்களை சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதை காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "தாய் நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து பனிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்தாயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி திறனை மேம்படுத்தவும் அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "காலை உணவு திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25 நாள் முதல் மாநிலம் முழுவதும்  உள்ள அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்தப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் அதை செய்தால் தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும்" எனவும் தெரிவித்துள்ளார்.