நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் இந்த விவகாரத்தை முதன்முறையாக உரத்த குரலில் வெளிப்படுத்தியதன் காரணமாக இது இன்று தேசிய அளவில் விவாத பொருளாக மாறி உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுவையில் ஒரு தொகுதி உள்ளது. இந்தத் தொகுதிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 31 ஆக குறையும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறி வருகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் இந்த அளவுக்கு நமக்கு பாதகம் ஏற்படும் என்பது முதல்வர் மு க ஸ்டாலின் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இதற்கு மத்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூட இதை மறுத்து பேசியுள்ளார். இருப்பினும் தொகுதி மறு வரையறை நடைபெறும் போது நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு தொகுதி குறைய வாய்ப்புள்ளதாகவே பல்வேறு அரசியல் நிபுணர்களும் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா தெலுங்கானா ஆந்திர பிரதேசம் கேரளா மேற்கு வங்காளம் ஒடிசா என பல மாநிலங்களிலும் தொகுதிகள் மாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இங்கெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதாவது ஹிந்தி அதிகமாக பேசப்படும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் காரணமாக அதற்கேற்றார் போல தொகுதிகள் மாற்றப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் இந்தத் தொகுதி மறு வரையறையின் போது தங்களது மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் மாநிலங்களின் அரசியல் தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் திமுக களம் இறங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகா ஆந்திர பிரதேசம் தெலுங்கானா மேற்கு வங்காளம் ஒடிசா பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைவர்களை திரட்டி சென்னையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின் .
இது தொடர்பாக இந்த தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக திமுக தரப்பிலிருந்து அமைச்சர் மற்றும் எம்பிகள் அடங்கிய குழுக்களை நியமித்து ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த முயற்சி வேறு ஒரு பார்வையிலும் பார்க்கப்படுகிறது. அதாவது தேசிய அளவில் தற்போது இரண்டு கூட்டணிகள் உள்ளன 1. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 2வது காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளடக்கிய இந்தியா கூட்டணி. இந்த இந்தியா கூட்டணியின் அதிவேகப் பிரச்சாரம் மற்றும் அதிதீவிர முயற்சிகளின் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. தற்போது மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை ஆட்சி ஆட்சி பீடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக திரட்டி வரும் இந்த புதிய முயற்சியானது எதிர்காலத்தில் ஒரு அணியாக கூட்டணியாக மாறும் வாய்ப்பு உள்ளதா என்ற ஒரு பார்வையும் எழுந்துள்ளது. இப்போதைக்கு அந்த திட்டம் திமுகவிடம் இல்லை என்றாலும் கூட நாளை காங்கிரஸ் கட்சியால் வட மாநிலங்களில் தொடர்ந்து பலவீனமாகிக் கொண்டே போகும் நிலை ஏற்பட்டால் தென் மாநிலங்களில் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க திமுக முயற்சிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் தேசிய அளவிலான ஒரு சக்தியாகவும் மாறும் சூழலையும் ஏற்படுத்த திமுக நிச்சயம் முயற்சிக்கும் என்றே கருதப்படுகிறது.
அந்த வகையில் திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் கூட்டியுள்ள இந்த தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டமானது பல்வேறு எதிர்பார்ப்புகளை தேசிய அளவில் ஏற்படுத்தி உள்ளது. நாளை தொகுதி வரை வரையறை மட்டுமல்லாமல் மும்மொழிக் கொள்கை தொடர்பாகவும் கூட புதிய முன்னெடுப்புகளை திமுக எடுக்கும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளதால் இந்தக் கூட்டத்தை பாஜகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்