தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி கரூரில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் அதிமுகவும் திமுகவும் கூட்டு களவாணிகள் என்ற முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக சார்பில் அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவும் அதிமுகவும் வேற வேற கிடையாது, இரண்டு பேரும் கூட்டு களவாணிகள் தான்” என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்த விஜய்தான் களவாணி” என்றார். மேலும் “கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சு நாலாந்தர பேச்சாளர் போல இருந்ததாகவும், விஜய் இன்னும் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை; வெறும் பன்ச் டயலாக் மட்டும் தான் பேசுகிறார்” என்றும் சாடினார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் “இந்த 60 நாட்களில் தவெக ஆட்சி செய்த சாதனைதான் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய இபிஎஸ், “முரண்பட்ட கருத்துக்களை சொல்லும் கட்சிகளின் ஆதரவுடன் தான் இந்த ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் வரைதான் தவெக ஆட்சி நிலைக்கும். தேர்தலுக்கு முன்பு இரண்டு திராவிட கட்சிகளும் சரியில்லை என்று சொன்ன விஜய் தற்போது திராவிட கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பிறகு ஒரு பேச்சு என முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுகிறார்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அதிமுக குறித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரசின் நிலைமை. திமுக ஆதரவில் வெற்றி பெற்று விட்டு தற்போது தவெகவுக்கு சென்று பதவி வாங்கியதுதான் காங்கிரசின் கொள்கையா? நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பரிதாப நிலையில்தான் உள்ளது” என்றார். மேலும் “சினிமாவில் புதுமை படைப்பது போல் விஜய் சினிமாவில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு எல்லாம் அரசு பதவி வழங்கி வருகிறார். அரசாங்கம் என்பது தற்போது சினிமா மாதிரி கேலிக்கூத்தாகிவிட்டது என்றார். மேலும் “வரும் காலத்தில் முதலமைச்சர் விஜயின் மேக்கப் மேனுக்கு கூட அரசு பதவி கிடைக்கலாம்” என்றும் கிண்டல் செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்