29,108 கூடுதல் பணியிடங்கள்! காவல்துறையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு என்ன? 
தமிழ்நாடு

போதைப்பொருள் ஒழிக்கும் கிராமங்களுக்கு பரிசு! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு என்ன?

"மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்." - விஜய்

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

முதலில் மானியக் கோரிக்கைகள் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் 50 கிராமங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனம் பெற்றது.

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

காவல்துறை அறிவிப்பு

1. மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

2. தமிழ்நாடு காவல் படையில் இந்த ஆண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.

3. போதைப்பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு ரூபாய் 10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.

4. ரூபாய் 712 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். செயற்கை நுண்ணறிவுடன் நவீன டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கிய நிகர்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Vijay in Assembly

5. லஞ்சமில்லாத நேர்மையான அரசாங்க உலகத்தை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சிறப்புப் பிரிவுகளுக்கும் அவசரச் சில்லறைச் செலவினம் (Contingency Fund) உயர்த்தப்படும்.

6. பணியின் போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரை இழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும். களப்பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் கருணைத்தொகையை 20 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.

7. வண்டலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பன்நோக்கு உள்விளையாட்டரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் சுமார் ரூபாய் 23 கோடி செலவில் அமைக்கப்படும்.

8. சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் (DNA test facility) சுமார் 16 கோடி செலவில் நிறுவப்படும்.

9. காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூபாய் 200 கோடி செலவில் வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

1. 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் சுமார் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

2. 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் 280 கோடி செலவில் கட்டப்படும்.

3. ஃபயர் அண்ட் ரெஸ்கியூ சர்வீஸ் டிரைனிங் அகாடமியின் இரண்டாம்கட்டப் பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், "அனைத்து அறிவிப்புகளும் புத்தக வடிவில் அச்சிடப்பட்டு மாண்புமிகு பேரவை உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நான் படித்ததாகக் கருதி பதிவு செய்யுமாறு மாண்புமிகு பேரவைத் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறி உரையை முடித்துக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்