"மக்களோடு மக்களாகப் பழகியவர்.. " - வேதனையைப் பகிர்ந்த முதலமைச்சர் விஜய்.. செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா சொன்னதென்ன? 
தமிழ்நாடு

"மக்களோடு மக்களாகப் பழகியவர்.. " - வேதனையைப் பகிர்ந்த முதலமைச்சர் விஜய்.. செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா சொன்னதென்ன?

"வட சென்னை மக்களுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரின் இழப்பு குடும்பம், கட்சி என தாண்டி ஒட்டுமொத்த வட சென்னையின் முக்கிய இழப்பு." - ஆதவ் அர்ஜுனா

Antony Ajay R

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கிட்டத்தட்ட 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று மதியம் உயிரிழந்ததாக MGM மருத்துவமனை அறிவித்தது. அவருக்கு வயது 75.

இந்த நிலையில் மருத்துவமனையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்கள் தவெக நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் தலைவரின் நம்பிக்கையும், அன்பையும் பெற்றவர். எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அண்ணன், வி.எஸ். பாபுவின் உயிர் பிரிந்தது.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். வட சென்னையின் முகமாக இருந்தவர். எங்கள் தலைவருடனான முதல் சந்திப்பிலேயே வட சென்னை மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் எனப் பேசியிருந்தார்.

அவரின் எளிமையான மொழி, அன்பாலும், தைரியத்தாலும் நிறைந்தது. எங்களின் தனிப்பட்ட அன்பு, என்னை தன் மகனாக பார்த்தார். வட சென்னை மக்களுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரின் இழப்பு குடும்பம், கட்சி என தாண்டி ஒட்டுமொத்த வட சென்னையின் முக்கிய இழப்பு." எனப் பேசியிருந்தார்.

வி. எஸ். பாபுவின் உடலுக்கு மரியாதை அஞ்சலி செலுத்த முதலமைச்சர் விஜய் மருத்துவமனை செல்வதாக தகவல் வந்திருக்கிறது.

முன்னதாக சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்த விஜய், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.