தமிழ்நாடு

கூட்டுறவு சங்க தேர்தல்; வழக்கு முடித்துவைப்பு!

Tamil Selvi Selvakumar

முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விதிகளை பின்பற்றியே, கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல், தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் ஆறு மாதங்களில் நிவர்த்தி செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவு துறை தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. 

ஆனால், வாக்காளர் பட்டியலில் குறைகளை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது தேர்தல் நடத்த முனைப்பு காட்டப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்த அரசுத் தரப்பு, முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தது. தொடர்ந்து அரசுதரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.