Madras High Court 
தமிழ்நாடு

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற விவகாரம்; தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

சந்துரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், இறந்தவரின் நண்பர்கள், மனுதாரர் பயணித்த கார் மீது

மாலை முரசு செய்தி குழு

கல்லூரி மாணவரை  கார்  ஏற்றி  கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் நிதின்சாய் என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில்  பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகி தனசேகரனின் பேரன் சந்துரு  சரண் அடைந்தார். கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜாமீன் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்துரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன், இறந்தவரின் நண்பர்கள், மனுதாரர் பயணித்த கார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால்,  தற்காப்புக்காக காரை வேகமாக இயக்கிய போது, துரதிர்ஷ்டவசமாக, நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.  மனுதாரர் காரை ஓட்டவில்லை. வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். 

காவல் துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், மனுதாரர், அவரது நண்பர்கள், இறந்தவர் சென்ற டூவீலரை, காரில் துரத்தி சென்று மோதியதால் நிதின்சாய்  இறந்துள்ளதாகவும், புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் கல்லூரி மாணவர் என்பதையும், ஏற்கனவே 41 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். 

பத்தாயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலையில் 10 மணிக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக கூடாது; சாட்சிகளை கலைக்க கூடாது என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.