தமிழ்நாடு

3 கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழப்பு...கிருஷ்ணகிரியில் சோகம்...

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள். கல்லூரி மாணவனாகிய இவர் ஓசூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு குமார், சக்திவேல் என்ற நண்பர்கள் உள்ளனர். அவர்களும் இளையபெருமாள் படிக்கும் அதே கல்லூரியில் தான் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரி நண்பர்களான 3 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளையபெருமாள் சூளகிரி மேம்பாலம் பகுதியில் தனக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்வதற்காக முயற்சி செய்துள்ளார்.

தொடர்ந்து, அதிவேகத்தில் சென்ற இளையபெருமாள் ஒருகட்டத்தில் நிலைதடுமாறவே  மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து லாரிக்கு அடியில் சிக்கி விட்டது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் நண்பர்கள் 3 பேரும் லாரிக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.