தமிழ்நாடு

வண்ண வண்ண விநாயகர் சிலைகள்..! கோலாகலமாக துவங்க இருக்கும் விநாயகர் சதுர்த்தி..!

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விற்பனைக்கு தயாராக இருக்கும் பல வண்ண விநாயகர் சிலைகள்.

Malaimurasu Seithigal TV

விநாயகர் சதுர்த்தி திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காளாங்கரை பகுதியில் 3 அடி உயரம் முதல் 12 அடி உயரம் வரையிலான பல விதங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கும், நீர்நிலைகளுக்கும் மாசு ஏற்படாத வகையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் கிழங்கு மாவு மற்றும் காகிதக் கூழை பயன்படுத்தி விநாயகர் சிலைகளுக்கான உடல், முகம், இடுப்பு, கை, கால், வாகனம் என தனித்தனி பாகங்களாக காளாங்கரைக்கு கொண்டு வரப்பட்டு, விநாயகர் சிலையின் பாகங்கள் பொறுத்தப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளது.

செங்கோட்டையில் தயாராகும் விநாயகர் சிலைகள் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம், ஆலங்குளம் , சுரண்டை, கடையம் மற்றும் இராஜபாளையம் போன்ற நகர் பகுதிக்கும், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிகளவு விற்பனை ஆகிறது. 

சிறிய விநாயகர் சிலைகள் ரூ.3 ஆயிரத்திற்கும், பெரிய அளவிலான விநாயகர்கள் ரூ.35 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர சிறுவர், சிறுமியர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்கின்ற வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் நகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 350 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு  3 நாட்கள் வழிபாட்டிற்கு பின்னர் சிலைகள் அனைத்தும் நீர் நிலைகளில் கரைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.