சத்தியமங்கலம் அருகே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் புழு கலந்து தண்ணீர் வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கோவிந்தராஜபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வீதிகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாயில் கடந்த இரண்டு வாரங்களாக அசுத்தமாக குடிநீர் வருவதாகவும், இன்று அதிகப்படியான புழுக்களுடன் குடிநீர் வந்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.