கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகம் வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த போது, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையரை மசோதாவை ஆதரிப்பவர்கள் 21ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் எனப் பேசியிருந்தார்.
தமிழகத்தில் தவெக, அதிமுக கட்சிகளுக்கு மக்களவை உறுப்பினர்கள் இல்லை. இடதுசாரி கட்சிகள் ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த சூழலில் ராகுலின் இந்தக் கருத்து திமுகவைக் குறிவைத்துப் பேசப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில், "நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!
#NEET தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!
பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!
ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!
டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் #NEETProtest மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!
தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது! அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" எனப் பட்டியலிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாக்கூர், "நம்பிக்கையை யார் விற்கிறார்கள் என்பது 17ஆம் தேதி தெரிந்துவிடும். வாய் வசனம் பேசுவதை தயாநிதி மாறன் நிறுத்த வேண்டும். மக்கள் இதன் காரணமாகவே உங்களை உட்கார வைத்திருக்க வேண்டிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாமலா ராகுல் காந்தி இங்குவந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். தொகுதி மறுவரையறை, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பிரச்சனை அது குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி வந்த நேரம் மழை பெய்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது” எனப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.