தமிழ்நாடு

முதலமைச்சர் தலைமையில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!!

Malaimurasu Seithigal TV

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும்  திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  இன்று காலை 10.30 மணிக்கு வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துறை வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.