தமிழ்நாடு

சங்கராபுரம் பகுதியில் தொடர் மழை... பூட்டை ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொடர்மழை காரணமாக பூட்டை ஏரி நிரம்பியாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Malaimurasu Seithigal TV

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிணற்று பாசனம், ஏரி பாசனத்தையே பெரும்பாலான விவசாயிகள் நம்பியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக சங்கராபுரம் பகுதியில் பருவமழை பொய்த்ததால் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வறண்டன.

இதனால் விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் நிலங்களை விவசாயம் செய்யாமல் கரம்பாகவே  போட்டு வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கராபுரம் பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக கல்வராயன்மலையில் பெய்து வரும் கன மழை காரணமாக மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3500 ஏக்கர் பரப்பளவு உள்ள பூட்டை கிராம ஏரி வேகமாக நிரம்பி வழிகிறது.

இதனால் உபரி நீர் பொய்க்குனம், செம்பராம்பட்டு, நெடுமானுார் கிராம ஏரிகளுக்கு செல்வதால் இந்த ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கி தீவிரமடைந்துள்ளதால் விரைவில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தியாகராஜபுரம், ஊராங்காணி, அ.பாண்டலம் உள்ளிட்ட பல கிராம ஏரிகள் நிரம்பும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் மழையால் சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருதுவதன் மூலம் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்