தமிழ்நாடு

உலகம் பயன்படுத்திய ஒரே ஆயுதம்.. செயல்படுத்த முடியாமல் திணறுகிறதா திமுக அரசு? 

Malaimurasu Seithigal TV

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கினை முழுமையாக செயல்படுத்துவதில் ஆளும் திமுக அரசு திணறுவதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக பிரபல நாளிதழுக்கு எழுதியிருந்த அந்த நபர்,  கொரோனா முதல் அலையில், மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். உலகமே போற்றும் வகையில் பிரதமர் மோடி கடும் விமர்சனங்களுக்கு இடையே முழு ஊரடங்கினை பிறப்பித்து கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பல மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதற்கு பிந்தைய ஊரடங்கு நடைமுறைகள் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிட்டதாம் மத்திய அரசு.

தற்போது இந்த இரண்டாவது அலையில் கூட உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலை கவலைக்கிடமாகி விட்டதாகவும், திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வரை நிலைமை சற்று கட்டுக்குள் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் அலையில் ஊரடங்கு அமல்படுத்திய பிரதமர் மற்றும் அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்த, தி.மு.க., மற்றும் ஊடகங்கள், இப்போது வாயை மூடிக் கொண்டுள்ளன. ஆனால் இன்று, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வோ, பா.ஜ.,வோ, 'தி.மு.க., அரசு ஊரடங்கு போட்டு மக்களை வதைக்கிறது; பொருளாதாரத்தை கொல்கிறது' என, விஷப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக தொற்றை தடுக்க, ஊரடங்கு தேவை; மக்கள், சிறிது காலம் அமைதி காத்து பொறுமையுடன் இருங்கள்' என, பொறுப்புள்ள எதிர்க்கட்சியினராக செயலாற்றி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.,

மேலும் திமுக அரசு ஊரடங்கினை முழுமையாக செயல்படுத்த முடியாமல் திணறுவதாகவும், மதியம் 12 மணி வரை, காலை 10 மணி வரை என மாறி மாறி குளறுபடி தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாது திடீரென தளர்வுகளற்ற ஊரடங்கு என கூறி, இரு தினங்கள் ஊரடங்கை நீக்கியது தவறான செயல் என கூறப்பட்டுள்ளது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் தான் திமுகவின் செயல் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இரு நாள் ஊரடங்கு ரத்து என்றதும், சொந்த ஊர் செல்ல மக்கள் அலை அலையாய் திரண்டதாகவும், மேலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதாகவும் அந்த மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஊரடங்கை ஊரெல்லாம் பரப்பும் முயற்சி என்றும், இதன் காரணாகவே கிராமங்களிலும் தொற்றுப்பரவ தொடங்கியிருப்பதாகவும், எப்போது திமுக விழித்துக்கொள்ளும் எனவும் அந்த கடித்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.