தமிழ்நாடு

கொரோனா ஒத்திகை...அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு...!

Tamil Selvi Selvakumar

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருத்துவ வசதி கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக பேட்டியளித்துள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் அவசர நிலை ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் வசதி, அரசில் 78 இடங்களிலும், தனியாரிடம் 264 இடங்களிலும் உள்ளதாக கூறினார். தமிழ்நாடு முழுவதும் 64 ஆயிரத்து 281 படுக்கை வசதிகள் உள்ளதாகவும், அதில் 33 ஆயிரத்து 664 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மருத்துவ வசதி கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பு, அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக பேசிய அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என விளக்கமளித்தார்.