தமிழ்நாடு

வேட்புமனுவில் தவறான தகவல்கள் :  ஓ.பி.எஸ்., அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!!

ஓ.பி.எஸ்., அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Malaimurasu Seithigal TV

வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்தது தொடர்பான வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்ட திமுக நிர்வாகி மிலானி தாக்கல் செய்த மனுவில், 2019 ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களில் தவறான தகவல்களை தந்ததாகவும், சொத்து விபரங்களை மறைத்தாகவும் தெரிவித்திருந்தார். 

இவ்வழக்கு தேனி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம்,  அவரது மகன் ரவீந்தரநாத் மீது தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையான பிப்ரவரி 7ம் தேதிக்குள், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.