தமிழ்நாடு

ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஈபிஎஸ் அணி நடத்திய கறி விருந்து..!

Malaimurasu Seithigal TV

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஈபிஎஸ் அணியினர் நடத்திய கறி விருந்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் அருகாமையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி அணியினர் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக கட்சி மாநாட்டிற்காக ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்பு விழாவில் போடி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக ஆதரவாளர்கள்  மற்றும்   மாற்றுக் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்ட  ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் ஒருங்கிணைப்பு விழாவில் பங்கேற்றனர்.

 அனைவருக்கும் போடிநாயக்கனூர் அதிமுக நகர பொறுப்பாளர் சேதுராமன் சால்வை மற்றும்  கட்சி துண்டுகள் அணிவித்து அதிமுக எடப்பாடி அணியில் இணைத்துக் கொண்டனர்.

 அனைவருக்கும் திருமண மண்டபத்தில் கறி விருந்து பிரியாணி உணவு வழங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர்.

 தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஓ பன்னீர்செல்வத்தினுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூரின்  சட்டமன்றத் தொகுதி அலுவலகம் அருகாமையிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி அணியினர்  கறி விருந்து நடத்தினர்.  

ஏற்கனவே அதிமுக கட்சி  ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து இரு அணிகளுக்கும் இடையே அவ்வப்போது உட்கட்சி பூசல் நிகழ்ந்து வருவதுமாய் இருக்கிறது.  இந்நிலையில் இப்படி ஓபிஎஸ் -ன் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதி அலுவலகத்தின் முன்பே ஈபிஎஸ் அணி சார்பாக கறி விருந்து வைத்தது அந்த பகுதியில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.