தமிழ்நாடு

"EPS-யை 'டெட்பாடி' என்றவருக்கு பதவியா?"- சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு... அதிமுகவில் மீண்டும் மூண்ட உட்கட்சி மோதல்!

கட்சியை வளர்க்க பொதுச்செயலாளராக இருக்கிறீர்களா? அழிக்க இருக்கிறீர்களா?

Muthu Lakshmi

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்டம் முழுவதும் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு சி.வி. சண்முகம் தரப்பினருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் உச்சமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சண்முகம் தரப்பினர் மண்டபத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கை கலப்பாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட செயலாளர் பசுபதியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பேசும் பொருளானது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட பொருளாளர் பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட 11 பேரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், நீக்கப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனம் விருந்தினர் மாளிகை எதிரே ஒன்றுகூடி, "எங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு நன்றி" என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயப்பிரகாஷ், கட்சி தலைமை மற்றும் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2001-ம் ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திமுக-காங்கிரஸ் கோட்டையாக இருந்ததாகவும், புரட்சித்தலைவி அம்மா அண்ணன் சி.வி.சண்முகத்தை களமிறக்கிய பிறகுதான் இது அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியது என்றும், சி வி சண்முகம் உழைப்பால் தான் தொடர் வெற்றிகள் கிடைத்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பசுபதி 2001-ல் பாமக சார்பில் போட்டியிட்டு தோற்றவர் என்றும், பின்னர் அண்ணன் சி.வி.சண்முகத்தின் காலில் விழுந்து, பணம் பெற்றுக் கொண்டுதான் கட்சிக்குள் நுழைந்தார் என்றும் தெரிவித்தார். மேலும் பசுபதி ஒரு சாராய வியாபாரி என்றும் சாடினார். அவரது சொந்த பூத் எண் 174-ல் 1,765 வாக்குகளில் அதிமுக பெற்றது வெறும் 62 வாக்குகள்தான் என்றும், இப்படிப்பட்டவர் பின்னால் படித்த வழக்கறிஞர்கள் செல்ல முடியாது என்றும் தெரிவித்தார். பொதுச்செயலாளர் எடப்பாடியாரை நோக்கி, "நீங்கள் திமுகவுடனும் உதயநிதி ஸ்டாலினுடனும் கள்ளக்கூட்டணி பேசவில்லை என்று உள்மனசாட்சியோடு சத்தியம் செய்ய முடியுமா? ஆர்.கே.என் ஹோட்டலில் 'திமுக ஆதரவு தருகிறது, நான் முதலமைச்சராக ஆகப் போகிறேன்' என்று நீங்கள் கூறினீர்களா இல்லையா?" என கேள்வி எழுப்பினார். கட்சியை வளர்க்க பொதுச்செயலாளராக இருக்கிறீர்களா? அழிக்க இருக்கிறீர்களா? என்றும், தினமும் யாரை நீக்கலாம் என்று மட்டுமே யோசிப்பதாகவும், இப்படி போனால் என்றாவது  ஒரு நாள் யாராவது எழுதிக் கொடுத்ததை சரியாக கவனிக்காமல் உங்கள் பெயரையே நீங்கள் நீக்கி அறிவிப்பு வெளியிட்டு விடுவீர்கள் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

கட்சி சட்டவிதிப்படி ஒருவரை நீக்கிவிட்டு மீண்டும் சேர்க்க 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், உங்களை 'டெட்பாடி' என்று திட்டிவிட்டு ஓடிய பசுபதியை, கே.பி.முனுசாமியின் சதி வலையில் வீழ்ந்து உடனே மாவட்ட செயலாளராக்கியதாக குற்றம் சாட்டினார். இந்த சாராய வியாபாரியால் விழுப்புரத்தில் அதிமுக வரலாறு முடிந்துவிட்டது. நாங்கள் எப்போதும் அம்மாவின் விசுவாசிகள்" என்று ஆவேசமாக கூறி முடித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.