தமிழ்நாடு

மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு ஆபத்து - இபிஎஸ் கண்டனம்!

Tamil Selvi Selvakumar

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என அறிவித்து விட்டு மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை, திமுக அரசு குறைத்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்து விட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்த திமுக அரசு, அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். ஆனால், திமுக அரசு அதை செய்யமால் அரசு பேருந்து நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் வேளையில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை, திமுக அரசு குறைத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட போக்குவரத்துத் துறைக்காக வாங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். கடந்த ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேட்டில் வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் இரவு முழுவதும் காத்திருந்ததாக சுட்டிக் காட்டிய அவர், புதிய பேருந்துகளை வாங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.