மகாளய அமாவாசையை ஒட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் புனித நீர் நிலைகளில் நீராடி, திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் முதியோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தர்ப்பணத்தோடு அரிசி, வாழைக்காய், வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை தானமாக கொடுத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மகாளய அமாவாசையை ஒட்டி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தும், ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர். அதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி, எள்ளு தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு வழிபாடு நடத்தினர்.
இதையும் படிக்க : நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்...!
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு செய்தனர். தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் காவிரி நீரில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி கோயிலில் வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னதாக பக்தர்கள் கடலில் புனித நீராடி, கடற்கரையோரத்தில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னதாக அரிசி, காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவைகளை வைத்து திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகாளய அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் சாலைகளின் ஓரத்தில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி மதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தனர். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், யானைக்கால் வைகையாற்று பகுதி, பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் புரோகிதர்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்