யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதால், தேசிய வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சி.பி.ஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் செய்திகள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டனர். இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், யானைகள் இறப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக எச்சரித்த நீதிபதிகள்,
ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.