தமிழ்நாடு

அமைச்சர் கைது நடவடிக்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?

Tamil Selvi Selvakumar

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி ஊழலில் ஈடுபட்டதற்கு தொடர்பான வழக்கில் மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய தினம் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும், கரூரில் அமைச்சருக்கு சொந்தமான இல்லத்திலும் முதலில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அடுத்தபடியாக தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையானது நிறைவு பெற்ற நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், போலீசார் அவரை நள்ளிரவில் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.