தமிழ்நாடு

காவல்துறையின் நடவடிக்கையில் தொய்வு... சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி!!

Malaimurasu Seithigal TV

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.

நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானுடன் கணவன் மனைவியாக தாம் வாழ்ந்ததாகவும், அப்போது சீமான் தம்மிடம் இருந்து பணம் வாங்கிவிட்டு மோசடி செய்துவிட்டதாகவும் நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் காவல்துறையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும், சீமானிடம் விசாரணை நடத்த கடந்த 9 ம் தேதி மற்றும் 14-ம் தேதி காவல்துறையினர் சம்மன் அளித்தனர். ஆனால் சீமான் அதற்கு ஆஜராகாத நிலையில், வரும் 18-ம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி நேற்றிரவு திடீரென வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று சீமானுக்கு எதிரான தமது புகாரை திரும்பப் பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, போதிய ஆதரவு கிடைக்காததால் தம்மால் சீமானுக்கு எதிராக சட்டப்படி போராட முடியாமல் போனதாக தெரிவித்தார். மேலும், தமக்கு உதவி செய்ய வந்த தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த வீரலட்சுமியும் பல இடங்களில் தம்மை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டினார். 

சீமான் மீதான புகார் விவகாரத்தில் வீரலட்சுமியின் நடவடிக்கைகள் வேறு போக்கில் இருந்ததாகக் குறிப்பிட்ட விஜயலட்சுமி, அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் புகாரை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தார். மேலும், சீமானிடம் தொலைப்பேசியில் பேசிய பின்னரே புகார் வாபஸ் பெறப்படுவதாகவும், அதற்காக அவரிடம் காசு ஏதும் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். 

ஒரு சாமான்யம் மீது இத்தகைய புகாரைக் கொடுத்திருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறிய விஜயலட்சுமி, சீமான் மீது காவல்துறையின் நடவடிக்கைகள் மெதுவாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும், சீமானுக்குத்தான் தமிழ்நாட்டில் நிறைய செல்வாக்கு இருக்கிறது, நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் என்றும் கூறினார்.  புகாரை திரும்பப் பெற்றுவிட்டு சொந்தவூருக்கே திரும்ப உள்ளதாகவும் கூறினார்.