முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த உதயநிதி; நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா - என்ன பேசினர்? 
தமிழ்நாடு

முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த உதயநிதி; நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா - என்ன பேசினர்?

"அமெரிக்காவில் 20 கோடி மக்கள் தொகையிலிருந்து 50 கோடி ஆகினாலும் எம்.பிக்களின் எண்ணிக்கை அதனடிப்படையில் உயராது. எம்.பியின் வேலை வேறு. எம்.எல்.ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகளின் வேலை வேறு." - ஆதவ் அர்ஜுனா

மாலை முரசு செய்தி குழு

மத்திய அரசு மீண்டும் நிறைவேற்ற இருப்பதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையரை மசோதவுக்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்மானத்தை எதிர்த்த போதிலும் திமுக மற்றும் தவெக கட்சிகள் ஓரணியில் நின்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தொகுதி மறுவரையால் தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மாற்றியமைக்கப்பட்டால் என்ன பாதிப்பு வரும் என இந்தியாவிலேயே முதல் முறையாக பேசியது எங்களின் தலைவர்தான்.

Udhayanidhi Stalin

கடந்த ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினோம். அதில் இப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டார். 'Fair Delimitation'என்ற பெயரில் தென்னிந்திய முதல்வர்கள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்களுடன் ஒரு கூட்டம் கூட்டினோம்.

மக்கள் தொகுதி கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்தால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். அதனால் தொகுதி மறுவரையை இன்னும் 25 ஆண்டுகள் தள்ளிப் போட வேண்டுமென அந்த கூட்டத்தில் முடிவெடுத்தோம். அதே நிலைப்பாட்டை சட்டமன்றத்திலும் அறிவித்தோம்.

கடந்த ஏப்ரலில் தொகுதி மறுவரையறை நகலை எங்களின் தலைவர் எரித்தார். எங்களின் எதிர்ப்பால்தான் பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் வந்த தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வருமென தெரிகிறது. 1971லிருந்து 2026 வரை நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை இன்னும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடும் சட்டத்திருத்தம் இந்த ஆண்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். 2027இல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

33% மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக ஆதரிக்கிறது. அதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் விகிதம் 7.18% லிருந்து குறையக்கூடாது எனக் கேட்டு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்." என்றார்.

திமுகவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய பொது பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "`மாநிலங்கள் இல்லாத ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல் தேசத்தின் வளர்ச்சி இல்லை. வடக்கு, தெற்கு எனும் யுத்தத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

அரசியல்ரீதியாக மாறுபட்ட கருத்து இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி. அண்ணா உருவாக்கிய கொள்கை திமுகவுக்கானது மட்டுமில்லை. அது தமிழகத்துக்கான கொள்கை. அந்த வழியில்தான் நாம் வந்திருக்கிறோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் இதே அவையில் மூச்சுள்ள வரை மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்திருக்கின்றனர்.

aadhav arjuna

வாஜ்பாய் 2001 இல் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்து தமிழகத்தின் எண்ணிக்கை குறைவதை தடுத்தார்.

அமெரிக்காவில் 20 கோடி மக்கள் தொகையிலிருந்து 50 கோடி ஆகினாலும் எம்.பிக்களின் எண்ணிக்கை அதனடிப்படையில் உயராது. எம்.பியின் வேலை வேறு. எம்.எல்.ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகளின் வேலை வேறு.

இந்த தீர்மானம் காங்கிரஸ், பாஜக சம்பந்தப்பட்டது அல்ல. மாநில சுயாட்சி சம்பந்தப்பட்டது.

நீட்டை நாடாளுமன்ற பெரும்பான்மைவாதத்தினால்தான் கொண்டு வருகிறார்கள். நமக்கு 100 எம்.பிக்கள் இருந்தால் அதையெல்லாம் கொண்டு வருவார்களா? நான்கைந்து மாநிலங்களிலிருந்துதான் ஒரு பிரதமர் வர வேண்டுமா?

தொகுதி மறுவரையறையை மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் எதிர்த்தார். அதை வரவேற்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களை போல தென் மாநிலங்களின் குரலும் நாடாளுமன்றத்தில் எடுபடாமல் போகும் சூழல் ஏற்படும்." என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்