தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்... 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்பு...

தற்காலிக முறையில்  பணி நியமனம் செய்யப்பட்ட 3485 செவிலியர்களை நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

கொரோனா பெருந்தொற்று தீவிர காலத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட 3485 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஈடுபட்டனர். 

MRB எனும் medical requirement board மூலமாக தேர்வு எழுதி மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில்  2020 ம் ஆண்டு மே மாதம் முதல் பணியில் உள்ள தங்களை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 

தங்களுக்கு முன்பும் பின்பும் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவையாற்றிய தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கூறினர். 

மேலும் தங்களுக்கான மாத ஊதியம் 14ஆயிரம் ரூபாய் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மொத்தமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது செவிலியர்களுக்கான நிரந்தப் பணி நியமனம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.