தமிழ்நாடு

"சுத்தம் என்கிற பெயரால் மீனவர்களின் வாழ்வை சிதைப்பது நீதிக்கு புறம்பானது" திருமாவளவன் 

Malaimurasu Seithigal TV

சுத்தம் என்கிற பெயரால்  மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்வது இயற்கை நீதிக்கு புறம்பானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது "காலம் காலமாக இவர்கள் இங்கு வாழ்ந்து  வருகிறார்கள். நாள் முழுவதும் பொதுமக்களுக்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
அப்படி இருக்கையில் நீதிபதிகள் நேரடியாக இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். 

பரம்பரை பரம்பரையாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை சுத்தம் என்கிற பெயராலும், அனைவருக்கும் பொது பயன்பாட்டு என்கின்ற பெயராலும், மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்வது இயற்கை நீதிக்கு புறம்பானது. மீனவ சமூகத்தவர்களின் இந்த உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பாரம்பரியமான வாழ்வாதாரத்தை சிதைக்க கூடிய வகையில் எந்த சட்டமும் எந்த நீதியும் அமைந்து விடக்கூடாது" எனக் கூறினார். 

மேலும் உயர் நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை அரசே தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று  இவர்களின் வசிப்பிடத்திற்கு அருகேவே கடைகளை இதே பகுதியில் கட்டித் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார் 

மேலும், இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.