முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுமா அல்லது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுபடி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலையுச்சியில் தீபம் ஏற்ற ஒருமுறை அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா? என அனைத்துத் தரப்பினரும் உற்றுநோக்கி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் இன்று கூடியிருந்தபோதிலும், தலைமை நீதிபதி சூர்யகாந்த அமரவு முன்பாக தமிழக அரசு சார்பில் எந்த ஒரு முறையீடும் முன்வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால், மறுசீராய்வு மனு நாளையும் விசாரணைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படும் என்றே தெரிகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன ஃபேஸ் டிடெக்ஷன் (Face Detection) கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன.
உச்சிப் பிள்ளையார் கோவில், நெல்லிதோப்பு, மலைப் பாதைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கருவிகளுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மலையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சி, தர்கா பகுதி, உச்சிப்பிள்ளையார் கோவில் மற்றும் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தீப திருவிழாவின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மதுரையில் இன்று மாலை அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் அதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமுமுக தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி பேரணி , ஆர்ப்பாட்டம் நடத்தினால், போராட்டக்காரர்களை கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றபடுமா என்பது குறித்து இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இன்று காவல்துறை டிஜிபி-யுடன் நடந்த ஆலோசனையை வைத்து பார்க்கும் போது, தீப தூணில் பலத்த பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்படும் என்று தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்