Dharapuram Bypoll Vote Counting 
தமிழ்நாடு

"ஸ்வீட் பாக்ஸை உள்ள வைங்க" முகம் மாறிய அதிமுக தொண்டர்கள்! தாராபுரத்தில் நழுவிய திமுக பிடி.. மீண்டும் தவெக முன்னிலை

அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை மாறுமா அல்லது சத்தியபாமா தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்வாரா...

Mahalakshmi Somasundaram

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஆரம்பத்தில் தவெக முன்னிலை பெற்ற நிலையில், இடையில் அதிமுக முன்னிலை பெற்றது. தற்போது 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தவெக வேட்பாளர் சத்தியபாமா 13,285 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 12,545 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 11,622 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் அதிமுகவை விட தவெக 740 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் சத்தியபாமாவின் அரசியல் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

சத்தியபாமாவை ஆதரித்து தவெக தலைவர் விஜய் நேரடியாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மாட்டுவண்டி ஓட்டியும், முருங்கைக்காய் பறித்தும் அவர் வாக்கு சேகரித்தார். இருப்பினும், பிரச்சாரத்தின்போது சத்தியபாமாவுக்கு தொகுதி மக்களிடையே எதிர்ப்பு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் இரண்டு சுற்றுகள் வரை சத்தியபாமா முன்னிலை வகித்தார். பின்னர் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை பெற்றார். இதனால் உற்சாகமடைந்த அதிமுக தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரண்டு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

ஆனால், தற்போது 5-ம் சுற்று முடிவில் தவெக மீண்டும் முன்னிலை பெற்றிருப்பது தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை மாறுமா அல்லது சத்தியபாமா தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இறுதி முடிவு வெளியாகும் வரை தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்