தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது வாக்கை பதிவு செய்தது பெரிய பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி காலை 7 மணிக்குத்தான் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்க வேண்டும். ஆனால், அஜித் குமார் 6.51 மணிக்கே தனது வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டார்.
இந்த விவகாரத்தின் பின்னணியைப் பார்த்தால், இன்று அதிகாலை 6.35 மணிக்கே நடிகர் அஜித் தனது காரில் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தார். ரசிகர்களின் கூட்டம் கூடினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதற்காக அவர் மிக விரைவாகவே அங்கு வந்துவிட்டார். அப்போது வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அதிகாரிகள் 'மாக் போலிங்' எனப்படும் மாதிரி வாக்குப்பதிவு சோதனைகளைச் செய்து கொண்டிருந்தனர். இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் இந்தப் பணிகள் முடிந்த உடனேயே, அங்கிருந்த அதிகாரிகள் அஜித்தின் பாதுகாப்பையும், அங்கு கூடத் தொடங்கிய ரசிகர் கூட்டத்தையும் கருத்தில் கொண்டு அவரை முன்னதாகவே வாக்களிக்க அனுமதித்ததாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் விதிகளின்படி 7 மணிக்குத்தான் பொதுமக்கள் வரிசை தொடங்க வேண்டும் என்றாலும், சில நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விஐபி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அதிகாரிகள் இது போன்ற முடிவுகளை எடுப்பதுண்டு. அஜித்தை ஆவணங்கள் சரிபார்க்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, முறையான அடையாள அட்டைகளைச் சரிபார்த்த பின்னரே அவர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டார். சரியாக 6.51 மணிக்கு அவர் தனது வாக்கை இயந்திரத்தில் பதிவு செய்துவிட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த சில நிமிடங்களிலேயே அதாவது 7 மணிக்குத்தான் மற்ற பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு முறைப்படி தொடங்கியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்