தமிழ்நாடு

காற்றில் சரிந்த கலைஞர் கட் அவுட்; இரு சக்கர வாகன ஓட்டி மீது விழுந்ததா?

Malaimurasu Seithigal TV

ஆவடியில் நாளை உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 அடி உயர கட் அவுட் பலத்தகாற்று வீசியதன் காரணமாக கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு மாலை ஆவடி சேக்காடு அருகே கவரப்பாளையத்தில் உள்ள மைதானத்தில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஆவடி எம்.எல்.ஏ நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தலைமையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ராட்சத கட் அவுட்டுகள் மற்றும் மேடைகள் பந்தல்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலை திடீரென காற்று பலமாக வீசியது. இதனால் கவரப்பாளையம் மைதானம் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் ஒட்டி ஒருவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் வாகன முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்த நிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த கட் அவுட் வைக்கும் ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.