வேதாரண்யம் அருகே மூதாட்டி ஒருவருக்கு, ஒரே நாளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சரபோஜிராஜபுரம் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது வண்டுவாஞ்சேரியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியான அலமேலு என்பவர், கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். மூதாட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருப்பதாக எண்ணிய சிலர், அவரை அழைத்துச் சென்று மீண்டும் தடுப்பூசி போட வைத்துள்ளனர்.
இதனையடுத்து மூதாட்டிக்கு 2 முறை தடுப்பூசி போடப்பட்டதை அறிந்த சுகாதாரத்துறையினர், அலுமேலுவை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட மூதாட்டி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.