தமிழ்நாடு

திமுக கூட்டணி கட்சிகள் அடிமை சாசன கட்சிகளாக மாறிவிட்டது...ஈபிஎஸ் விமர்சனம்!

Tamil Selvi Selvakumar

திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாட்களே இல்லை எனவும், பாலியல் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  21 மாத திமுக ஆட்சியில் கலைஞருக்கு நூலகம் கட்டியதை தவிர, மக்களுக்கு வேறு எதையும் செய்யவில்லை எனவும் சாடினார்.

டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகை வழங்கவில்லை என  தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தை பாஜகவினர் தங்களுடன் இணைந்து தொடங்கி விட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சிகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கருணாநிதி நினைவு மண்டபத்தில் பேனா சின்னம் அமைத்துவிட்டு மீதம் இருக்கும் தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம் என விமர்சித்தார்.